கள்ளக்குறிச்சி மரணம்.. சட்ட சபையில் புயலை கிளப்பிய அதிமுக எம்எல்ஏக்கள்..அமளியால் வெளியேற்றம்
கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு உடையில் வந்திருந்தனர்.
சட்டசபைக்கு கறுப்பு உடை அணிந்து வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு வந்து அமளியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட அனைவரும் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையிலும் இந்த சம்பவம் புயலை கிளப்பியது. அதிமுக எம்எல்ஏக்கள் இன்று காலையிலேயே கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர்.
அவை துவங்கிய உடன் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு அப்பாவு மறுப்பு தெரிவிக்கவே கைகளில் பேப்பரை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். அதற்கு சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அமளியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் எனவும் அமைதியாக அமர வேண்டும் எனவும் சபாநாயகர் வலியுறுத்தினார். மிரட்டல் விடும் வகையில் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபநாயாகர் எச்சரித்தார்.
அதனை கேட்காத அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையை விட்டு அவை காவலர்களால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டது ஏன் என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அவையை விட்டு வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சபைக்கு வெளியே முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?