மாமூல் கேட்டு மிரட்டிய குண்டர்கள்.. தர மறுத்த ஹோட்டல் ஓனருக்கு கத்தி குத்து.. வெலவெலத்த வண்ணாரப்பேட்டை
சென்னை வண்ணாரப்பேட்டை அருகே செருப்பு கடை மற்றும் ஓட்டலில் மாமூல் கேட்டு தரமறுத்ததால், கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டையை அடுத்த ஜேபி கோயில் தெருவில், உசேன் என்பவருக்கு சொந்தமான செருப்பு கடை செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், செருப்புக் கடைக்குள் புகுந்து, மாமூலாக செருப்புகளை கேட்டுள்ளனர். இதற்கு மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த கும்பல், கடை உரிமையாளர் உசேன் தலை மற்றும் கையில் வெட்டிவிட்டு, ஊழியர் யாசர் அராஃபத்தை வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேபோல், அதேபகுதியில் உள்ள உட்லண்ட்ஸ் என்ற பாஸ்ட்புட் கடைக்குள் நுழைந்த இதே கும்பல், மாமூல் கேட்டு தரமறுத்ததால், கடை உரிமையாளர் பஷீர் அகமதுவை கையில் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். காயமடைந்த 3 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த 2 சம்பவங்கள் தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்பகுதியில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடாததன் காரணமாக, போதை ஆசாமிகள் கடை உரிமையாளர்களை மாமூல் கேட்டு தொல்லை செய்து வருவதாக கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பரோட்டா கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கிய கும்பல் தான், இந்த சம்பவத்தையும் அரங்கேற்றியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?