மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க : தமிழக வாக்காளர் பட்டியல் இடம் பெற நாளை கடைசி நாள்
தமிழக வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் இடம் பெற நாளை கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. இம்மாதம் 4-ந்தேதி முடிய இருந்த நிலையில் டிசம்பர் 11-ந்தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனால் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் இந்த பணியின் போது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.ஐ.ஆருக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் வரும் 11-ந்தேதியுடன் நாளையுடன் முடிவடைகிறது. அதற்கு பிறகு வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 15-ந்தேதிவரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நேற்று வரை நடந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். அதில், '9-ந்தேதி(நேற்று)வரை 6 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள்( 99.95 சதவீதம்) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. அவற்றில் 6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் அதாவது 99.55 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன' என குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?

