ஸ்டிக்கர் ஸ்டாலின்..  அக்கா 1825.. தென் சென்னை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் 

Apr 16, 2024 - 17:03
ஸ்டிக்கர் ஸ்டாலின்..  அக்கா 1825.. தென் சென்னை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் 

மத்திய அரசின் திட்டங்களையே தமிழக அரசு செயல்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டி வருவதால் ஸ்டிக்கர் ஸ்டாலின் என்று சொல்லாம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். தென்சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை தமிழிசை சௌந்தரராஜன்  வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அரசியல் கட்சிகள் பொதுவாக தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக அளித்தாலும்  ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், அக்கா 1825 (365x5 years) என்ற தலைப்பில் தேர்தல் தமிழிசை சௌந்தராஜனின் தென்சென்னை உத்திரவாதம் என தொகுதி மக்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.  
நான் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ள பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி, அவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணையும் கூறினார். தனி மொபைல் செயலி மற்றும் வாட்ஸ்அப் எண் (95509 99991) மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை கூறலாம் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "தென்சென்னையை வளர்ச்சி அடைந்த தொகுதியாகவே அனைவரும் பார்க்கும் வேளையில், இப்பகுதி குப்பைகள் நிறைந்த, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியாகவே காணப்படுகிறது. இங்கு போக்குவரத்து நெரிசல் மட்டுமே உள்ளது. வளர்ச்சித் திட்டங்களே இல்லை. மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வந்து தென்சென்னையை வளர்ச்சி அடைந்த தொகுதியாக மாற்றுவேன் என்றார்.

மெட்ரோ திட்டத்திற்கான நிதியைப் பெற முடியாதது நாடாளுமன்ற உறுப்பினரின் இயலாமையால் தான். வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டில் ஒரு இ-பஸ் கூட இல்லை. திராவிட மாடல் என உணர்ச்சிகரமாக பேசுகிறோமே ஒழிய, விஞ்ஞானப்பூர்வமான, வளர்ச்சிகரமான திட்டங்கள் எதுவும் இல்லை என்று தமிழிசை குற்றம் சாட்டினார். 

தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்த போதும் தமிழ்நாட்டை பற்றியே சிந்தித்தேன். அரசியல் ரீதியாக இருந்த சிக்கல்களாலேயே கோதாவரி இணைப்பை மேற்கொள்ள முடியவில்லை. என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்தால் ஆளுநராக இருந்த போது இருந்த நட்பை பயன்படுத்தி கடலில் வீணாக கலக்கும் கோதாவரி நீரை சென்னைக்கு கொண்டு வந்து சேர்ப்பேன் என்று உறுதி அளித்தார் தமிழிசை.

மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதால் ஸ்டிக்கர் ஸ்டாலின் என்றே சொல்லலாம். தமிழர்களைப் பற்றி பேச திமுக, காங்கிரசுக்கு தகுதியில்லை. நீட் விலக்கிற்கு முதல் கையெழுத்து போடுவேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்னவானது? கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏன் இலங்கைக்கு கொடுத்தீர்கள், அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்" என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow