விட்டாச்சு லீவு.. ஜிலு ஜிலு கொடைக்கானலில் என்ஜாய் செய்ய குவிந்த பயணிகள்.. எங்கும் டிராபிக் ஜாம்

பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Apr 12, 2024 - 10:53
விட்டாச்சு லீவு.. ஜிலு ஜிலு கொடைக்கானலில் என்ஜாய் செய்ய குவிந்த பயணிகள்.. எங்கும் டிராபிக் ஜாம்

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு கோடை காலங்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை அழகை ரசிப்பார்கள். குணா குகை எபெக்ட் காரணமாக தற்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறையை யொட்டி கடந்த இரண்டு நாட்களாக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிந்தனர்.

குறிப்பாக பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, வனச் சுற்றுலாத்தலங்கள், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 

ஏரிச் சாலையில் குதிரை, சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்தனர். பயணிகள் வருகை அதிகரிப்பால் கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்றிரவு 8 மணி வரையும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையின் இரு புறங்களிலும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து நின்றன.

நத்தை போல வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. போக்குவரத்தை சீர்செய்ய போதிய காவலர்கள் பணியில் இல்லாததால் நெரிசலை குறைக்க முடியாமல் பணியில் இருக்கும் காவலர்கள் தடுமாறினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow