மூன்று கட்ட பேச்சுவார்த்தை... சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு...

Feb 29, 2024 - 13:10
மூன்று கட்ட பேச்சுவார்த்தை... சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு...

மக்களவைத் தேர்தல் தொடர்பான மூன்று கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு சில வாரங்களில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா 1 இடம் என திமுகவுடன் தொகுதிகள் உடன்பாட்டை நிறைவுசெய்தன. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சென்னை அறிவாலயத்தில் திமுக 3ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், 2 தொகுதிகளில் போட்டியிட திமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். 3 தொகுதிகளில் போட்டியிட வலியுறுத்தியபோதும், பிற கட்சிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு 2 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே வெற்றிபெற்ற மதுரை, கோவை தொகுதிகளையே தற்போதும் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கை நிறைவு செய்யப்பட்டபின், எந்தத் தொகுதிகள் என தெரியவரும் எனவும் அவர் கூறினார். திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகளின் நிலையும் தெரியவராததால், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுக கூட்டணியுடன் 2 தொகுதிகளை உறுதி செய்ததாகக் கூறினார். எத்தனை இடங்கள் என்பதைக் காட்டிலும் நாடு முக்கியம் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். எண்ணிக்கை மட்டும் 2 தொகுதிகள் என முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், எந்தத் தொகுதிகள் என ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow