"திருநங்கைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் தலைவிகள்".. காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
வெளியூரில் இருந்து வரும் திருநங்கைகளை ஆசை வார்த்தைக் கூறி பாலியல் தொழிலில் தள்ளுவதாக அவர்களின் தலைவிகள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக திருநங்கை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை மந்த்ரா என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "நான் டெய்லராக வேலை செய்து வருகிறேன். என்னுடன் என் சக தோழிகள் 5 பேர் வசித்து வருகிறார்கள். எங்களுக்கு மூத்த திருநங்கைகளாக இருக்கும் 3 பேர் ஜமாத் என்ற ஒரு சிஸ்டம் வைத்துள்ளனர்.
ஜமாத் தலைவிகள் என்று சென்னைக்கு மட்டும் 21 தலைவிகள் உள்ளனர். இப்படி ஒரு சிஸ்டத்தை வைத்துக்கொண்டு, வெளிமாநிலங்களில் பெண் உணர்வுடன் இருக்கும் சிறியவர்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக கண்டறிகின்றனர். பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு எந்தவொரு சிகிச்சையோ, கவுன்சிலிங்கோ வழங்காமல், ஆண் உறுப்பை அகற்றுகிறோம், சிலிக்கான் மார்பகங்கள் வைக்கிறோம் என ஆசை வார்த்தைக் கூறி சென்னைக்கு வரவைக்கிறார்கள்.
பின்னர் அவர்களை பகலில் பிச்சை எடுக்கவும், இரவில் பாலியல் தொழிலும் ஈடுபடுத்துகிறார்கள். இதற்கு ஒப்புக்கொள்ளாத திருநங்கைகளை கட்டாயபடுத்தியும் இதில் ஈடுபட வைக்கிறார்கள். மேலும் இந்த திருநங்கைகளை திருட்டு, போதைப்பொருட்கள் போன்ற சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடுத்துகின்றனர். இவை அனைத்திற்கும் ஜமாத் தலைவிகளான 3 பேர் தான் காரணம்.
இதனை தட்டிக்கேட்டதால் என்மீது காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுத்துள்ளார்கள். எனவே காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, இதற்கு காரணமான 3 தலைவிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது புகாரில் திருநங்கை மந்த்ரா தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?