நால்வர் கொலை வழக்கு.. 4 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ், அவரது தாய் புஷ்பவதி, சகோதரர் செந்தில்குமார், சித்தி ரத்தினம்பாள் ஆகியோர் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 3- தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பான விசாரணையில், வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களான செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோர் மோகன்ராஜின் தோட்டத்தில் அமர்ந்து மது அருந்தியதாகவும், அதை தட்டிக்கேட்டதால், அவரையும், அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக வெங்கடேஷ் உள்ளிட்ட 3 பேர் மற்றும் கொலைக்கு உதவியதாக வெங்கடேஷின் தந்தை ஐயப்பன், சகோதரர் செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டமும் பாய்ந்தது.
இந்த கொலை வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று (15-04-2024) தீர்ப்பு வெளியானது. நீதிபதி சொர்ணம் நடராஜன் தனது தீர்ப்பில், முக்கிய குற்றவாளிகளான வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா, ஐயப்பன் ஆகியோருக்கு, ஒரு கொலைக்கு ஒரு ஆயுள் தண்டனை வீதம், ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆயுள் தண்டனையும், செல்வத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்ட நால்வர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?