போதைப்பொருள் கடத்தல் வழக்கு.. விசாரணை வளையத்துக்குள் இயக்குநர் அமீர்..
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக திரைப்பட இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக்கை கடந்த 9ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரது முக்கியக் கூட்டாளி சதானந்தன் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது மலேசியா, துபாய், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் அவர் போதைப்பொருட்களை விநியோகித்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் அமீருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முக்கியக் காரணம் ஜாபர் சாதிக் அமீருக்கு நெருக்கமான நண்பர் என கூறப்படுவதோடு மட்டுமல்லாமல், அவரது தயாரிப்பில் "இறைவன் மிகப் பெரியவன்" என்ற படத்தை இயக்குவது தான்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங், போதைப்பொருள் கடத்தலில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை ஜாபர் சாதிக், ரியல் எஸ்டேட், திரைப்படம் உள்ளிட்ட துறைகளிலும் முதலீடு செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் பாலிவுட் திரைத்துறையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இப்படி செய்திகள் அமீரை சுற்றி சுழன்றடிக்கவும், இதுகுறித்து விளக்கமாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதில் "போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தற்போது வரை உண்மை எதுவென்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், செய்தி உண்மையென்றால் அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்ட விரோதச் செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் தொடர்ந்து நான் பணியாற்றப் போவதில்லை" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏப்ரல் 2ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஜாபர் சாதிக்கின் நண்பர் அப்துல் பாஷித்திற்கும் அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அதிகாரிகள் தன்னை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் செல்லத் தயார் அமீர் ஏற்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?