234 தொகுதியில் பிப் 2-வது வாரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்:புதிய திராவிட கழகம் அறிவிப்பு
பிப்ரவரி 2-ம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தை புதிய திராவிட கழகம் சார்பில் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: 2021 சட்டமன்ற தேர்தல் முதலே திமுகவிற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம். 30.11.2025 அன்று ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் எங்கள் கட்சியின் 6-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் துணைமுதல்வர் உதயநிதி உள்பட அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த மாநாட்டில், வேட்டுவக்கவுண்டரின் உட்பிரிவுகளான வேட்டுவக்கவுண்டர், வேட்டைக்காரர், வேட்டைக்கார கவுண்டர், பூலூவர், பூலுவக்கவுண்டர், புன்னம் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்கார நாயக்கர், வேடர், வேட்டுவர், வில்வேடுவர், மலைவாழ் வேட்டுவர், வால்மீகி, வலையர் ஆகிய பெயர்களில் தமிழகத்தில் BC, MBC, SC, ST, DNC) ஆகிய பிரிவுகளில் உள்ள அனைத்தையும் MBC-யாக வேட்டுவக்கவுண்டர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். எங்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டுமென திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். திமுக தலைமையில் 234 தொகுதிகளிலும் அறிவிக்கப்படவுள்ள வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதில் புதிய திராவிட கழக நிர்வாகிகள் வெற்றிக்கு அயராதுபாடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பிப்ரவரி 2-ம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் புதிய திராவிட கழகத்தின் சார்பாக தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?

