வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல!! பன்னீர்செல்வம் அதிமுகவில் சேர்க்கவே முடியாது: எடப்பாடி திட்டவட்டம்
ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று(ஜன. 29) நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டு, ஓ. பன்னீர் செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதனால் அதிமுகவில் அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது பொதுச் செயலாளர் எடுத்த முடிவல்ல, 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையில் நடந்த கூட்டத்தில் அவர் செய்த துரோகத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை.
அதிமுகதான் ஆட்சி அமைக்கும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. தினம் தோறும் தமிழகத்தில் பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆட்சியில் கண்டு கொள்ளவில்லை. இதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்னும் சில கட்சிகளோடு பேசி கொண்டு இருக்கிறோம். அந்த கட்சிகளை ஒருங்கிணைத்த பிறகு எந்தந்த தொகுதிகள் யார் யாருக்கு என்பதை அறிவிப்போம்.அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். 210 தொகுதிகளில் எங்களது கூட்டணி வெற்றி பெறும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது.
கொரோனா காலத்தில் விஜய் வெளியே வந்து இருப்பாரா? விஜயை பார்க்க வந்தததால் தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல கூட விஜய் வரவில்லை. விஜய் சிறந்த நடிகர் மட்டுமே, அரசியல்வாதி கிடையாது. யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அரசியல் என்றால் மக்களை சந்திக்க வேண்டும். விஜய் அப்படி சந்திக்கிறாரா? இவ்வாறு எடப்பாடி கூறினார்.
What's Your Reaction?

