சிஏஏ சட்டத்திற்கு அதிமுக ஆதரவு... எல்லாத்துக்கும் காரணம் ஓபிஎஸ் தான்... ஒரே போடு போட்ட ஓ.எஸ்.மணியன்...
நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டத்தை அதிமுக ஆதரித்தது ஏன் என்று அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஓ எஸ் மணியன் விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதல் இன்றி ஓ.பன்னீர்செல்வம் தன்னிச்சையாக எடுத்த முடிவு அது என அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஓ எஸ் மணியன் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கும்பகோணத்தில் அதிமுக தேர்தல் பணிமனையை அதன் அமைப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய ஓ.எஸ்.மணியன், “அதிமுகவில் இரட்டை தலைமை இருந்தபோது நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயம் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக முடிவெடுத்து சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்” என்றார்
மேலும், “அதனைதொடர்ந்து தான் அதிமுகவிற்கு இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமை வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏ சட்டம் வருவதற்கு ஓபிஎஸ் தான் காரணம். அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இனி எந்த காலத்திலும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை” என்று ஓஎஸ் மணியன் உறுதிபடக்கூறினார்.
What's Your Reaction?