பதிவை மாற்றிப் போட்டு மாட்டிக்கொண்ட மின்சாரத்துறை.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
மின்வெட்டு குறித்து அமைச்சரின் விளக்கத்திற்கு முரணாக இருந்த மின்சாரத்துறையின் பதிவு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாகப் பரவலாக நிலவி வரும் மின்தடைப் பிரச்னை, பொதுமக்களைத் தாண்டி அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அரங்கேறி வருவது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், செங்கோட்டையன் போன்ற அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் மின்தடை ஏற்படுவதும், அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதும் வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில், மதுரையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்றார். அப்போது மேடையில் நீதிபதி ஒருவர் பேசிக்கொண்டிருந்த வேளையில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்துத் தனது எக்ஸ் (X) பக்கத்தில் விளக்கமளித்த அமைச்சர் நிர்மல்குமார், "இந்நிகழ்ச்சி ஜெனரேட்டர் மூலமே நடைபெற்றது. ஒரு ஜெனரேட்டரிலிருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின் இணைப்பை மாற்றியபோது வெறும் 5 வினாடிகள் மட்டுமே மின்சாரம் தடைபட்டது" எனப் பதிவிட்டிருந்தார்.
அமைச்சர் விளக்கமளித்த சிறிது நேரத்திலேயே, மின்சாரத்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து முற்றிலும் முரண்பாடான பதிவு ஒன்று வெளியானது.
அதில், "ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் உள்ள 110 KV மின்பாதையில் காலை 11:22 மணியளவில் ஏற்பட்ட பழுது (Jumper cut) காரணமாகவே மின்தடை ஏற்பட்டது. பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் இன்னும் 2 மணி நேரத்தில் மின்விநியோகம் சீராகும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சரின் கூற்றுக்கும் மின்சாரத்துறையின் பதிவுக்கும் இடையே பெரும் முரண்பாடு இருந்ததால், "மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறதா?" எனச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
விமர்சனங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மின்சாரத்துறை தான் முன்பு வெளியிட்ட பதிவை உடனடியாக 'டெலிட்' (DELETE) செய்தது. பின்னர், அமைச்சரின் விளக்கத்திற்கு ஒத்துப்போகும் வகையில் புதிய பதிவு ஒன்றை மீண்டும் வெளியிட்டது.
அதில், "நிகழ்ச்சிக்கு மின்வாரிய இணைப்பு வழங்கப்படவில்லை; 3 ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிக்கான ஜெனரேட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், தானியங்கி முறையில் மாற்று ஜெனரேட்டருக்கு மாற்றப்பட்டதில் 5 வினாடிகள் மட்டுமே தாமதம் ஏற்பட்டது" எனத் திருத்திப் பதிவிட்டது.
பதிவிட்டு, அதை டெலிட் செய்து, மீண்டும் புதிய பதிவை வெளியிட்ட மின்சாரத்துறையின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
நேற்று (செப்.25) வண்டலூர் அருகே அரசுப் பள்ளி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வந்த செய்திக்குத் தாம்பரம் காவல்துறை, "இது தவறான செய்தி, உடனே டெலிட் செய்யவும்" எனப் பதிவிட்டு, கடும் எதிர்ப்பிற்குப் பின் அந்தப் பதிவை டெலிட் செய்துவிட்டுப் புதிய விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மின்சாரத்துறையும் அதேபோலச் செய்திருப்பதைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியினர், சமூக வலைதளங்களில் பதிவிட்டுப் பின்னர் நீக்குவதே தவெக அரசின் வழக்கமாகிவிட்டது என விமர்சித்து வருகின்றனர்.
What's Your Reaction?