அமைச்சருக்கு மட்டும் பாதுகாப்பு கவசம்....தூய்மை பணியாளர்களுக்கு எங்கே? நெட்டிசன்கள் கேள்வி!
சென்னையில் சாலையோரங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்த நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும், சாலையோரங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்கள் கைகளுக்கும், கால்களுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதேநேரத்தில், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கால்களில் பூட்ஸ் அணிந்துகொண்டு பணியில் ஈடுபட்டிருப்பதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஆனால், தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாதது ஏன் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தேங்கிய மழைநீர் அல்லது கழிவுநீரில் நேரடியாக இறங்கி பணியாற்றுவதால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னையில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் குறித்த அச்சம் நிலவும் நிலையில், துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டனவா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
What's Your Reaction?

