+2 தேர்வு முடிவுகள் வெளியானது.. வழக்கம் போல மாணவிகளே டாப்
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு காலை 9:30 மணிக்கு வெளியானது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வுகள், கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. 3,324 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 4.17 லட்சம் மாணவர்கள், 4.33 லட்சம் மாணவிகள், 23,747 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் எழுதினர்.
இதையடுத்து, விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி, 21ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்த பள்ளிக்கல்வித்துறை, நீட் தேர்வை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதை மே 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
அதன்படி, இன்று காலை 9.30 மணியளவில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். www.dge.tn.gov.in www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தாங்கள் கொடுத்துள்ள அலைபேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகள் இன்றைய தினமே (மே 6) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
What's Your Reaction?