சனிக்கிழமை குண்டு வெடிக்கும்... கர்நாடக முதலமைச்சருக்கு வந்த மிரட்டல்...

மிரட்டலை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Mar 5, 2024 - 16:06
Mar 5, 2024 - 16:09
சனிக்கிழமை குண்டு வெடிக்கும்... கர்நாடக முதலமைச்சருக்கு வந்த மிரட்டல்...

பெங்களூரு உணவகத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், கர்நாடகா முதலமைச்சருக்கே வந்த வெடிகுண்டு மிரட்டலால் அந்த மாநிலமே பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறது.

கடந்த 1-ம் தேதி பெங்களுரூவில் பரபரப்பான சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு பேரிடியாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் பல அமைச்சர்களுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில், ரூ.19 கோடி பணம் கேட்கப்பட்டுள்ள நிலையில், அதை தரவில்லை என்றால், வருகிற சனிக்கிழமை (9ஆம் தேதி) சரியாக மதியம் 2.48மணிக்கு,  ரயில்வே நிலையம், வணிக வளாகம் என மக்கள் அதிகளவில் குவியும் பொது இடங்களில் குண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அந்த மின்னஞ்சல் ஷாகித் கான் என்பவரின் பெயரில் அனுப்பட்டிருக்கிறது. 

அவர் யார்? அவர் எங்கு இருக்கிறார்? என்பது குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் அதைதொடர்ந்து கர்நாடகா முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என கர்நாடகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இதுதொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினரும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow