ஜம்மு காஷ்மீரில் உள்ள 26 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் காலை 7 மணி தொடங்கி நடைபெற உள்ளது.இதனால் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மாநில முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாகக் கடந்த 18ம் தேதி 24 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 61 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக இன்று 3 மாவட்டங்களில் உள்ள 26 சட்டசபை தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வண்ணம் மாநில போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.