ஜெயக்குமார் மரணம்... காட்டிக் கொடுக்கப்போகும் செல்போன்கள்... மர்ம முடிச்சுகள் விலகுமா?

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக, அவரது வீட்டின் அருகே பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்கள் குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

May 8, 2024 - 15:45
ஜெயக்குமார் மரணம்... காட்டிக் கொடுக்கப்போகும் செல்போன்கள்... மர்ம முடிச்சுகள் விலகுமா?

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் மாயமானதாக அவரது மகன் ஜெஃப்ரின் புகார் அளித்திருந்த நிலையில், கடந்த மே 4ஆம் தேதி அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளதாகவும், நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும்.
 
இதனால் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டு, போலீஸ் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தனுஷ்கோடி ஆதித்தனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜெயக்குமாரின் மகன்களான, ஜெஃப்ரின், ஜோஸ்பின் மற்றும் அவரது சகோதரர் செல்வராஜ் ஆகியோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். உயிரிழந்தது ஜெயக்குமார் தானா என்பதை உறுதி செய்ய அவரது மகன்களிடம் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

ஜெயக்குமார் தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டு எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோரது பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கே.வி. தங்கபாலுவிடம், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, தனக்கு யாரெல்லாம் பணம் தர வேண்டும் என்பது குறித்த பட்டியலையும் தனது மருமகனுக்கு எழுதியிருந்த கடிதம் வெளியாகி வழக்கில், மேலும் பரபரப்பை கூட்டியது. 

இந்நிலையில், தற்போது ஜெயக்குமாரின் வீடு அமைந்துள்ள கரைசுத்துப்புதூர் பகுதியில், 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் போலீசார், ஜெயக்குமாரின் செல்போனுக்கு இறுதியாக வந்த அழைப்புகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புகார் அளிக்கப்பட்ட தேதி மற்றும் ஜெயக்குமார் காணாமல் போன தேதிக்கு இடையே கரைசுத்துப்புதூர் வந்து சென்ற வாகனங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ள காவல்துறை, அப்போது, ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மொபைல் எண்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

ஜெயக்குமார் தனது மகன்களுக்கு கடிதம் எழுதாமல் மருமகனுக்கு கடிதம் எழுதியது ஏன் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow