மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற பிரேமலதா அழைப்பு!.. மார்ச் 21-ம் தேதி நேர்காணல்...
வேட்பாளர்களுக்கு வரும் 21-ம் தேதி தலைமைக் கழக அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 19-ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் முக்கிய தலைவர்கள், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கட்சி உறுப்பினர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடைபெறவுள்ள 18-வது நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 19-ம் தேதி காலை 11 மணி முதல் தங்களது விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15,000 மற்றும் தனி தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10,000 செலுத்தி மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமனு பெற்றவர்களுக்கு வரும் 21-ம் தேதி (வியாழக்கிழமை) கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
What's Your Reaction?