ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு.. சபரிமலை தேவசம்போர்டு முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரு நாளைக்கு இனி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே சாமிதரிசனம் செய்ய முடியும் எனவும் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்று மக்கள் சாமிதரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில், உடனடி தரிசனம் - ஆன்லைன் பதிவு என இருமுறைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த இரு முறைகளையும் பயன்படுத்தப்பட்ட நிலையில், மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனின்போது 15 மணி நேரம் வரை தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆண்டு மண்டல பூஜை நேரத்தில் ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாமல் வீடு திரும்பினர். சமூக வலைத்தளங்களில் தேவசம்போர்டு நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து கூட்டநெரிசல் தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
நேரடி முன்பதிவு காரணமாக நாள்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாகக் கூறி உடனடி தரிசன முறையை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. இனி சீசன் காலங்களில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டுவந்த உடனடி முன்பதிவு கவுன்டர்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மண்டல - மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டம் முடிந்ததும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் அறிக்கையை வெளியிட்டார். அதில் இனி வரும் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கை, வரும் 23ம் தேதி உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் ரோப் கார் பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அப்பம், அரவணைக்குத் தேவையான பொருட்களை கொண்டு செல்லவும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கும் ரோப்கார் பயன்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?