குடியால் குடும்பம் நாசம்.. தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவினரை வசைபாடிய பெண்.. விக்கித்து போன ஈரோடு
during election campaign
Apr 3, 2024 - 12:49
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளரையும் நிர்வாகிகளையும் பெண் ஒருவர் திட்டித்தீர்த்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக மரப்பாலம் நால்ரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, வேட்பாளர் பிரகாஷ் ஆகியோர் உரிய நேரத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.இதனால் அவர்களின் வருகைக்கு முன்னதாகவே கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது
அப்போது, கூட்டத்திற்குள் புகுந்த பெண் ஒருவர் தான் ஒரு திமுகவை சேர்ந்தவர் என்றும் அவர் வசிக்கும் மரப்பாலம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து புகார் அளித்தால், திமுக கவுன்சிலர் உட்பட யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இத்தோடு விட்டுவிடாமல் அந்த பெண் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மக்களுக்கு பணம் கொடுத்து கூட்டத்திற்கு அழைத்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தார். குறிப்பாக குடியால் பலரது வாழ்க்கை நாசமாகியுள்ளதாகவும், தனது கணவரும் குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவதாக கூறி கூட்டத்தில் முறையிட்டார்.
இதனால் கோபமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அப்பெண்ணை திட்ட முற்பட்டனர். அப்போது முந்திக்கொண்ட அந்த பெண் அச்சில் ஏற்ற முடியாத பல வார்த்தைகளால் கட்சியினரை பேசியது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தான் உழைத்து சம்பாதிப்பதாகவும் உங்களை போல கும்பிடு போட்டு சாப்பிடவில்லை என்றும் தனது ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.