திமுக மதத்திற்கு எதிரி அல்ல.. மதவாதத்திற்குத் தான் எதிரி.. மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திராவிடம் என்ற சொல் மேல் பயம் உள்ளவர்கள் திமுகவை மதத்தின் விரோதிகளாக சித்தரிக்க முயல்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வண்டியூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், "நீங்கள் அளிக்கும் வாக்கு உங்கள் தொகுதிக்கான எம்.பி.யைத் தேர்வு செய்ய மட்டும் இல்லை. இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வர அடித்தளம் அமைக்கப் போகிறது. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் செய்யப்பட்ட நன்மைகளும், திட்டங்களும் குறித்து ஒருநாள் முழுக்க பேசிக் கொண்டே இருக்க முடியும். திமுக அரசு இந்த 3 ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்த பெருமிதத்துடன், உரிமையுடன் உங்களிடம் வாக்கு கேட்கிறேன்.
கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி கடுமையான நிதி நெருக்கடியில் தமிழ்நாட்டைத் தவிக்க விட்டுச் சென்றார். திட்டங்களைத் தீட்டுவது மட்டுமல்ல, அதன் பலன்கள் முறையாக மக்களிடம் சென்று சேருகிறதா என்பதை நேரடியாக கண்காணித்து வருகிறோம். மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஸ்ரீகாந்த் என்பவர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பிரெய்லி முறையில் 4 மாதங்களாக இடைவிடாமல் படித்து வங்கித் தேர்வில் சாதித்திருக்கிறார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால், பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகமாகி இருக்கிறது.
கல்வியையும், மருத்துவத்தையும் நம்முடைய இரு கண்களாகப் பார்க்கிறோம். இதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திராவிடம் என்ற சொல் மேல் பயம் உள்ளவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்குதான் நாங்கள் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின் அதிகமாக கலந்து கொள்ளும் அரசு விழாக்களே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் விழாக்கள்தான்.
தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. வாக்குகளை பிரித்து பா.ஜ.க.வுக்கு உதவ B-டீம் ஆக உள்ளார். கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நடகம் நடத்துகிறார். பிரசாரத்தில் எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை மறந்தாவது பேசுகிறாரா? மண்புழுவாக ஊர்ந்து, பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்த பழனிசாமியால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நன்மை என ஏதாவது இருக்கிறதா? துரோகத்திற்கு உருவம் இருந்தால், அது பழனிசாமிதான் என்று உலகத்திற்கு காட்டியதைவிட, அவர் வேறு என்ன செய்திருக்கிறார்? தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரின் முதுகிலும் குத்தியவர் தான் எடப்பாடி பழனிசாமி" என சாடினார்.
What's Your Reaction?