ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த மாட்டேன்.. பிரதமர் மோடி சூளுரை
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எந்த தடை வந்தாலும் நிறுத்தமாட்டேன். ஊழல்வாதிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டணியை கண்டு பயப்பட மாட்டேன் - பிரதமர் மோடி
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழல்வாதிகளின் கூட்டணியைக் கண்டு பாஜக ஒருபோதும் அச்சப்படாது எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பாஜக சார்பில் பிரதமர் மோடி, தமது அதிகாரப்பூர்வ பிரசாரத்தை உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தொடங்கினார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், “2014, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களைப் போல, 2024 தேர்தலிலும் மீரட்டிலிருந்தே பிரசாரத்தைத் தொடங்குகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் சாத்தியமற்ற பல இலக்குகளை எட்டியுள்ளோம். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுவது மற்றும் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியாது எனக் கூறியதை எல்லாம் பொய்யாக்கி அதனை நிஜமாக்கி காட்டினோம்.
கடந்த 10 ஆண்டுகளாக நாம் ஊழலுக்கு எதிராக போராடி வருவதால் சிலர் பிரச்னைகளை சந்திக்கின்றனர். ஊழலுக்கு எதிராகப் போராடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், ஊழல்வாதிகளைக் காப்பாற்றப் போராடும் மற்றொரு குழுவுக்கும் இடையே தான் இந்த மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எந்த தடை வந்தாலும் நிறுத்தமாட்டேன். ஊழல்வாதிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டணியை கண்டு பயப்பட மாட்டேன்.
கச்சத்தீவு விவகாரம் மூலம், காங்கிரஸ் அரசின் மற்றுமொரு தேச விரோதச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத்தீவு நம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை, 40 - 50 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தீவால் எந்தப் பயனும் இல்லை எனக் காங்கிரஸ் அதை தாரை வார்த்துள்ளது”. என்று பேசினார்.
What's Your Reaction?