அடுத்தடுத்து கைதாகியும் அடங்காத பினு.. குண்டர் சட்டத்தை போட்ட போலீசார்..

சென்னையில் ஒரே இடத்தில் ஒட்டுமொத்த ரவுடிகளை குவித்து கொத்தாக சிக்கிய ரவுடி பினு மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Apr 1, 2024 - 14:38
Apr 1, 2024 - 16:01
அடுத்தடுத்து கைதாகியும் அடங்காத பினு.. குண்டர் சட்டத்தை போட்ட போலீசார்..

கேரளாவை பூர்வீகமான கொண்ட ரவுடி பினு சூளைமேட்டிலேயே செட்டிலாகி ரவுடியாக வலம் வந்துள்ளார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் கள்ளத்துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொடர்ந்து சென்னை சூளைமேட்டில் அவர் வசித்து வந்த நிலையில், 2018ம் ஆண்டு குன்றத்தூர் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், ஒரே நேரத்தில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் திடீரென ஒன்றுகூடுவதை அறிந்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி நிகழ்ச்சி நடந்த இடத்தை சுற்றிவளைத்த போலீஸ் படை, ஒரே நேரத்தில் 75 ரவுடிகளை அதிரடியாக கைது செய்தது...

இவ்வாறு தேடினாலும் கைது செய்ய முடியாத ரவுடிகளை ஒரே நேரத்தில் கைது செய்யக் காரணமாக இருந்த பினு, இந்த சம்பவத்தின் மூலம் பிரபலமானார். அதே நேரத்தில் பிறந்தநாள் கேக்கை அரிவாளால் வெட்டிக் கொண்டாடும் வழக்கத்தாலும் அவர் அறியப்பட்டார். 

2018ம் ஆண்டு கைது செய்யப்பட்ட போது, பரபரப்பாக பேசப்பட்ட ரவுடி பினு, வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலானது. அதில், "நான் அவளோ பெரிய ரவுடியெல்லாம் கிடையாதுங்க, எனக்கு உடம்புல சுகர் உள்பட பல பிரச்சினைகள் இருக்குங்கன்னு" பேசியது அப்போது பேசுபொருளானது...

இதன் பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த பினு, காவல்நிலையத்தில் கையெழுத்திடாமல் தப்பிச்சென்றார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில்,  கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். மேலும், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதும், ஜாமின் பெற்று தப்பிச்சென்று தலைமறைவாவதையும் அவர் வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கள்ளத்துப்பாக்கியை விற்பனை செய்த புகாரில், ரவுடி பினுவை சூளைமேடு போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடி பினு மீது தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

இதனிடையே ரவுடி பினு மீது சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது எனவும், தேர்தல் நெருங்குவதையொட்டி ரவுடிகள் மீது நடவடிக்கைகள் தொடரும் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow