கச்சத்தீவு.. கலர் கலராக பொய் சொல்லும் மோடி.. ஆர்.எஸ். பாரதி கடும் தாக்கு
தேர்தல் நேரம் என்பதால் கலர் கலராக பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிடலாம் என பிரதமர் மோடி நினைப்பதாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரம் என்பதால் கலர் கலராக பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிடலாம் என பிரதமர் மோடி நினைப்பதாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போடுவதாக பிரதமர் மோடி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ் இனத்தை அழிக்க நினைத்த இலங்கை இன்றைக்கு திவாலாகி பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது. அப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு பிச்சை போட்டவர்தான் பிரதமர் மோடி.
திவாலான இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்காமல் தேர்தல் தோல்வி பயம் காரணமாக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் மோடி. ஒரு பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என மோடி நம்பிக் கொண்டிருக்கிறார், ஆனால் நிச்சயம் அது எடுபடாது என்று விமர்சித்தார். மேலும், “கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தெளிவான பதிலை அளித்துவிட்டார்.
தமிழகம் கேட்கின்ற நிதியை கொடுக்க மனம் இல்லாத பிரதமர், மக்களை திசை திருப்ப இம்மாதிரியான நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். ஏதோ நாங்கள் நேற்று கச்சதீவை கொடுத்தது போல, இன்றைக்கு இதுகுறித்து பேசி வருகிறார். 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிராக அன்றைக்கே திமுக தலைவர் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றினார்.
தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த வரலாறு இவர்களுக்கு தெரியவில்லை 50 வருடங்கள் ஆகிவிட்டது. தோல்வி பயத்தால் கலர் கலராக பொய்களை சொல்கிறார்கள். மத்திய அரசு நிதியில் இருந்து ஏறத்தாழ 34,000 கோடி இலங்கைக்கு கொடுத்த மோடி அரசு, அப்போது அவர்களிடம் கேட்டு கச்சத்தீவை வாங்கி இருக்கலாமே” என்று ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
What's Your Reaction?