39 மணி நேரமாக வெள்ளத்தில் சிக்கித் தவித்த விவசாயியை மீட்ட தன்னார்வலர்கள்

ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள தண்ணீரில் உயிரை பணயம் வைத்து நீந்தி சென்று விவசாயி செல்லையாவை பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.

Dec 21, 2023 - 17:56
Dec 21, 2023 - 19:06
39 மணி நேரமாக வெள்ளத்தில் சிக்கித் தவித்த விவசாயியை  மீட்ட தன்னார்வலர்கள்

கன மழையால் உணவு உறக்கம் இல்லாமல் 39 மணி நேரமாக வெள்ளத்தில் சிக்கித் தவித்த விவசாயி உயிரை பணயம் வைத்து மீட்ட தன்னார்வலர்கள் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம், பத்தமடை அருகே கொழுமடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்லையா (72)தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் நாள்தோறும் செல்லையா தோட்டத்திலே தங்குவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 17ஆம் தேதி தோட்டத்தில் தங்கி இருந்தபோது இரவு திடீரென கொழுமடை பகுதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் செல்லையாவின் தோட்டத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் அவர் சுதாரித்துக்கொண்டு மரத்தின் மீது ஏறி உயிர்பிழைத்தார். ஆனால் கண்முன்னே அவர் வளர்த்த ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச்சென்றது.

இந்த நிலையில் 39 மணி நேரமாகியும் செல்லையா உணவு உறக்கமின்றி மரத்தில் இருந்தபடி பரிதவித்து வந்துள்ளார். இது குறித்து அவரது மகன் அளித்த தகவலின் அடிப்படையில் எஸ்டிபிஐ கட்சியின் மீட்பு குழுவினர் அங்கு நேரில் சென்று சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள தண்ணீரில் உயிரை பணயம் வைத்து நீந்தி சென்று விவசாயி செல்லையாவை பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.எனவே எஸ்டிபிஐ கட்சி குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow