வாடும் பயிர்கள்.. பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு போராடிய கீழ்பவானி விவசாயிகள் கைது
ஈரோட்டில் கீழ்பவானி முறைநீர் விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் புன்செய் பயிர்களுக்கு 5 கட்டங்களாக தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனை நம்பிய கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் எள், கடலை, சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் 5-ஆம் நனைப்புக்குரிய தண்ணீரை அதிகாரிகள் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தண்ணீர் திறக்கக் கோரி சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனிடையே கீழ்பவானி முறைநீர் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கடைசி நனைப்பு தண்ணீர் தேவையில்லை என நீர்வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கு எதிராக கீழ்பவானி முறைநீர் விவசாயிகள் கூட்டமைப்பு செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், கீழ்பவானி முறைநீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தவறான தகவலை அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், ஈரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?