மணல் கடத்தல் வழக்கு...ED விசாரணைக்கு ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும்...உச்சநீதிமன்றம் அதிரடி
தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதால் ஆட்சியர்கள் ஆஜராக அவகாசம் வழங்க கோரிய நிலையில் உத்தரவு.
சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் ஈட்டிய வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிந்த அமலாக்கத்துறை, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் 34 இடங்களில் சோதனை மேற்கொண்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பொதுத்துறைச் செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு எப்படி வழக்கு தொடர முடியும்? என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும், இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் தான் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஏன் இதில் தலையிட்டு இடையூறு செய்கிறது? எனவும் வினவிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று (ஏப்ரல் 2) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் நடைபெற உள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் உள்ளதால் ஆட்சியர்கள் நேரில் ஆஜராவதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பான தரவுகளை இந்த மாத இறுதிக்குள் அமலாக்கத்துறைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
What's Your Reaction?