மீனாட்சி அம்மன் கோவில் அருகே நகைக்கடையில் தீ விபத்து

தீ விபத்து காரணமாக தெற்கு மாசி வீதி பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Nov 28, 2023 - 11:30
Nov 28, 2023 - 13:24
மீனாட்சி அம்மன் கோவில் அருகே நகைக்கடையில் தீ விபத்து

மீனாட்சி அம்மன் கோவில் அருகே நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக தெற்கு மாசி வீதி பகுதியில் ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு கடையில் உள்ளே மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.நான்கு மாடிகளை கொண்ட இந்த கடையில் எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டதால் உள்ளே இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். 

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மதுரை திடீர்நகர், அனுப்பானடி, தல்லாகுளம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, விரைந்து வந்த 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
தீ விபத்து காரணமாக புகை அதிகளவிற்கு வெளியேறியது 3 மணி நேரம் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட  நிலையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தின்போது கடைக்குள் 3வது தளத்தில் கழிவறையில் சிக்கி இருந்த கடையில் பணிபுரியும் ஊழியர் மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த மோதிலால்(47) என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்ததால் தீயணைப்புத்துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடற்கூராய்விற்காக  உடல் கொண்டு செல்லப்பட்டது.இந்த தீ விபத்து காரணமாக தெற்கு மாசி வீதி பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் அருகே நகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்தும், தீ விபத்து குறித்தும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow