இனி அமைச்சர் இல்லை..! ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி..! ஓகே சொன்ன ஆளுநர் ரவி..! அடுத்து என்ன?
ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அளிக்கப்பட்ட கடிதத்தை ஏற்றதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில், கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்துக் கழகத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க, கடந்தாண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், திமுக அரசில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்தாண்டு ஜூன் 13ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் பல ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், ஜூன் 14-ம் தேதி இரவோடு இரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த 8 மாதங்களாக சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்புகளாக பிரித்து வழங்கப்பட்டு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் தொடர்ந்தார்.
ஆனால், அதற்குள் ஜூன் 30-ம் தேதி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்தார். இதனால் சர்ச்சை எழுந்த நிலையில், ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார். இதையடுத்து, ஆளுநரே தமது உத்தரவை வாபஸ் பெற்றார். மேலும், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்று அவரே முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.
அதற்கு, வழக்குகள் உள்ள காரணத்தினாலேயே அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று ஆளுநருக்கு பதிலளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்கிடையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில்பாலாஜி பதவியில் நீடிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுக்க உத்தரவிட்டதுடன், தார்மீக ரீதியாக சரியானதல்ல என்றும் கருத்து தெரிவித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்ட நிலையில், அமைச்சரை பதவி நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, கடந்த ஜனவரி 5-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி, 2-வது முறையாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “230 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தும் செந்தில்பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், நேற்று (பிப்.12) தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி கடிதம் எழுதினார். அதில், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், சில தீய சக்திகள் என் மீது பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர். நான் நிரபராதி, உண்மை நிலைபெற சட்டப்பூர்வமாக தொடர்ந்து போராடுவேன். நமது நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. விரைவில் நீதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
What's Your Reaction?