1150 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்... 6 பேரை தட்டி தூக்கிய கோவில்பட்டி போலீஸ்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 1150 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை, போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் கோவில்பட்டி சண்முகா திரையரங்கின் பின்புறம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறை தனி பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிபிரிவு காவல் துறை உதவி ஆய்வாளர் ஸ்டிபன்ராஜ், தனிபிரிவு தலைமைக் காவலர் முத்துமாரி, தனிப்பிரிவு காவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர காண்கணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு கும்பல் வாகனம் ஒன்றில், ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்த நிலையில், போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் தப்பியோடிய நிலையில், 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து பிடிபட்ட வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 23 மூட்டைகளில் 1150கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, பிடிபட்ட ஊரணி தெருவினை சேர்ந்த சிவராம் குமார், தங்கச்சரவணன், அஜய், திருப்பதி, பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த், செக்கடி தெருவினை சேர்ந்த மாரிராஜா ஆகிய 6 பேரையும் போலீசார், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய வாகனம் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்க சென்ற போது, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரேஷன் அரிசி கடத்தி செல்ல பயன்படுத்திய வாகனத்தின் சாவி தொலைந்துவிட்டது என கூறியுள்ளனர். தனிபிரிவு போலீசார் ஒப்படைத்த சாவி தொலைந்து விட்டதாக கூறியது, செய்தியாளர்களை மட்டுமல்ல காவல்துறையினரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
What's Your Reaction?