கடலில் மிதந்து வந்த பொட்டலம்.. 6 கோடி மதிப்புள்ள கொக்கைன் சிக்கியது எப்படி?
ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக மாநில போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் 1 கிலோ கொக்கைன் போதை பொருளுடன் 5 நபர்களை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் மூன்று பேரை கைது செய்து 1 கிலோ கொக்கைன், ஒரு கார் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த மீனவர்களான பாண்டி, பழனீஸ்வரன், வனகாப்பாளர் மகேந்திரன், காசிம், முகமது முபாரக், எட்வர்ட் ஷாம், முகமது இத் ரீஸ், காஜா மொய்தீன் ஆகிய 8 பேர் என்பது தெரியவந்தது.
கடலில் மிதந்து வந்த பொட்டலங்கள்:
மீனவர்களான பாண்டி மற்றும் பழனீஸ்வரன் ஆகியோர் கடலில் மீன் பிடித்து வந்த போது வலையில் இரு பொட்டலங்கள் கிடைத்துள்ளது. என்ன பொருள் என தெரியாமல் மீனவர்கள் தவித்து வந்த போது, தங்களுக்குத் தெரிந்தவரான வனகாப்பாளர் மகேந்திரனிடம் அந்த பொட்டலத்தை கொடுத்துள்ளனர். அப்போது அவர் பிரித்து பார்த்து இது விலையுயர்ந்த போதை பொருளான கொக்கைன் என தெரிவித்து, இதனை சென்னையில் விற்பனை செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என கூறி போதை பொருள் கும்பலுடன் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.
பல பேரிடம் பேரம் பேசிய நிலையில், நேற்று சென்னையில் காரில் தனி தனியாக விற்பனை செய்ய 1 கிலோ கொக்கைனுடன் வந்த போது கோயம்பேட்டிலும், கிண்டியிலும் வைத்து போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர்.
பொதுவாக ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தும் கும்பல், பொட்டலங்களாக செய்து கடலில் வீசிவிட்டு அதன் பின் எடுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறும். இதனால் அதே போன்று தண்ணீரில் போடப்பட்ட போதை பொருள் மீனவர்களின் வலையில் சிக்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் மத்திய போதை பொருள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை போலீசாரிடம், மாநில போதை பொருள் நுண்ணறிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட 2 கிலோ கொக்கைன் போதை பொருள் மதிப்பு 6 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் சென்னையில் யாரிடமாவது போதை பொருள் விற்க வந்துள்ளனரா? என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Read more: வீட்டில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
What's Your Reaction?






