ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்குக் கடத்தவிருந்த 112 கிலோ போதைப்பொருளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு இரண்டு ஷிப் ஏஜென்ட்களையும் கைது செய்துள்ளனர். 

Sep 27, 2024 - 17:58
ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
sample image

சென்னைத் துறைமுகத்திலிருந்து நேற்றைய முன்தினம் சரக்குக் கப்பல் ஒன்று ஆஸ்திரேலியாவிற்குச் செல்லத் தயாராக இருந்தது. அதற்கு முன்னதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சென்னையிலிருந்து போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாகவும் சரக்குக் கப்பலில் இருந்து புறப்படத் தயாராக இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறை தனிப்படை அதிகாரிகள் துறைமுகத்தில் புறப்படத் தயாராக இருந்த சரக்குக் கப்பலை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். 

சரக்கு கப்பலில் உள்ள பார்சல்களை ஒவ்வொன்றாக இறக்கிப் பார்த்த பொழுது குவாட்ஸ் என்கிற பவுடர் 450 மூட்டைகள் கொண்ட பெட்டகங்களை திறந்து பார்த்துள்ளனர். இந்த 450 மூட்டைகளில் தலா 50 கிலோ குவாட்ஸ் பவுடர் இருந்துள்ளது.

இந்த குவாட்ஸ் பவுடர் என்பது டியூப் லைட் உள்ளே பயன்படுத்தக்கூடிய வெள்ளை நிற பவுடராகும். இந்த பவுடர் 450 மூட்டைகளில் நிரப்பப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு பார்சல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஒவ்வொரு மூட்டைகளிலும் சூடோ பெட்டரின் என்கிற போதைப்பொருள் தயாரிக்கக்கூடிய மூலப் பொருளானது மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொண்ட மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பெட்டகத்தில் உள்ள மூட்டைகளையும் பிரித்துப் பார்த்து கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் 37 குவாட்ஸ் தூள் மூட்டைகளில் தலா 3 கிலோ என 37 மூட்டைகளில் சூடோ பெட்டரின் போதைப்பொருள் இருந்துள்ளது. 

இதனையடுத்து இந்த பார்சல் எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சென்னையைச் சேர்ந்த அபுதாஹீர் (30) மற்றும் அகமது பாஷா (35) ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இருவரும் துறைமுக கார்கோ ஷிப்பிங்கில் ஏஜென்ட் ஆக பணியாற்றி இருப்பதும் தொலைபேசி அழைப்பின் மூலமாக இந்த பார்சல்களை தங்கள் பெயரில் பதிவு செய்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாகவும் இதில் போதைப் பொருட்கள் இருப்பது தங்களுக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் NDPS சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இவர்கள் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் மற்றும் நான்கு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இருவரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு இந்த போதைப் பொருள் கடத்தலில் இன்னும் யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளார்கள்?  இவர்களுடைய தொலைபேசி அழைப்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து தொடர்பு கொண்ட நபர்கள் யார் என விசாரணை மேற்கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow