Garudan Box Office: பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடிய சூரி... நாளுக்கு நாள் எகிறும் கருடன் வசூல்!
கடந்த வாரம் வெளியான சூரியின் கருடன் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் கோடிகளில் வசூலித்து வருகிறது.
சென்னை: விடுதலையை தொடர்ந்து கருடன் படத்தில் லீட் ரோலில் நடித்தார் சூரி. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த வாரம் ரிலீஸானது. சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன், வடிவுக்கரசி, ஷிவதா, மைம் கோபி, இயக்குநர் ஆர்வி உதயகுமார் ஆகியோரும் கருடனில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நட்பு, துரோகம், விஸ்வாசம், அம்மன் கோயில் நிலப் பிரச்சினை என கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது கருடன். இதுபோன்ற கதைகள் கொண்ட படங்கள் ஏற்கனவே தமிழில் வெளியாகியிருந்தாலும், சூரியின் நடிப்பால் கருடன் கொஞ்சம் தனித்து நிற்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
சசிகுமாரும் உன்னி முகுந்தனும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர். இவர்களில் உன்னி முகுந்தனின் விஸ்வாசியாக நடித்துள்ள சூரி, ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார். விஸ்வாசியாக அடங்கிப் போகும் இடங்களாகட்டும், அல்லது நியாயத்தின் பக்கம் நிற்கும் போது ஆக்ஷனில் மிரட்ட வேண்டிய காட்சிகளாகட்டும், சூரி நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார். முக்கியமாக இடைவேளை காட்சியில் சூரி சாமி ஆடிய காட்சியிலும், இரண்டாம் பாதி தொடங்கியது முதல் க்ளைமேக்ஸ் வரையிலும் தரமான சம்பவம் எனலாம்.
சூரியின் கேரியரில் கருடன் தவிர்க்க முடியாத படம் என ரசிகர்களே சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டனர். அதேபோல், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்திருந்தது. இதனால் கருடன் படத்திற்கு முதல் நாளிலிருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. மேலும், பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கருடன் படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் முதல் நாளை விட இரண்டாவது, மூன்றாவது நாட்களில் கருடன் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதாவது கருடன் திரைப்படம் முதல் நாளில் 3.5 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
அதன் தொடர்ச்சியாக சனி கிழமையான இரண்டாவது நாள், 4.35 கோடி வரை கலெக்ஷன் செய்தது கருடன். இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று, 6 புள்ளி 10 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் மொத்தம் 3 நாட்களில், 15 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூரி மட்டுமின்றி கருடன் படக்குழுவினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். கருடனை தொடர்ந்து சூரி நடித்துள்ள கொட்டுகாளி, விடுதலை 2ம் பாகம் ஆகியவை இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?