ஐ.நாவில் காசா போர்நிறுத்த தீர்மானம்... அமெரிக்கா மீது பாய்ந்த இஸ்ரேல்..

பெரும்பான்மையான வாக்குகள் அடிப்படையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், முதன்முறையாக காசாவில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியுள்ளது.

Mar 26, 2024 - 11:32
ஐ.நாவில் காசா போர்நிறுத்த தீர்மானம்...  அமெரிக்கா மீது பாய்ந்த இஸ்ரேல்..

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது, கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு போர் தொடுத்தது. தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில், காசாவில் 13,000 குழந்தைகள் உள்ளிட்ட 32,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் விளைவாக மனிதாபிமான உதவிகள் இன்றி பசி, பஞ்சத்தில், காசாவில் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காசாவுக்கு ஆதரவான ஐ.நாவின் பல்வேறு முயற்சிகளை, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா தடுத்து நிறுத்தியது. தொடர்ந்து ரமலான் பண்டிகையையொட்டி காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களால் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து 15 நாடுகள் கொண்ட கவுன்சிலில், 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அப்போது பேசிய அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், போர் நிறுத்தத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு ஹமாஸ் தான் காரணம் என குற்றம்சாட்டினார்.  மேலும் தீர்மானத்தின் அனைத்து பகுதிகளையும் ஏற்கவில்லை எனக்கூறி, வாக்களிப்பதில் இருந்து பின்வாங்குவதாகவும் தெரிவித்தார். வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல், வாக்களிப்பை புறக்கணித்தைத் தொடர்ந்து, பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் காசா உடனடி போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம், தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாதது, முந்தைய நிலைபாட்டில் இருந்து தெளிவான பின்வாங்கல் என குற்றம்சாட்டியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow