1லட்ச ரூபாயை நெங்கும் சவரன்: தங்கம் விலை புதிய உச்சம் : இன்று சவரனுக்கு ரூ 720 அதிகரிப்பு
வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. விரைவில் தங்கம் 1 லட்ச ரூபாயை தொடும் என்பதால் நகைப்பிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600-க்கும் விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ‘கிடுகிடு'வென உயர தொடங்கியது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. தொடர்ச்சியாக ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனையானது. கடந்த 12-ந்தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்துக்கு இணையாக வெள்ளி விலையும் போட்டி போட்டு அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.213-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
What's Your Reaction?

