ஓபிஎஸ் புதிய கட்சி பெயர் ? 23-ம் தேதி அறிவிக்கிறார்: புதிய கட்சி கொடியில் எம்ஜிஆருக்கு ஜெயலலிதா செங்கோல் படம்
ஓ.பன்னீர்செல்வம் ‘உரிமை மீட்பு கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். வரும் 23-ம் தேதி அதற்கான அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிட உள்ளதாகவும் தெரிகிறது.
என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக மீது பன்னீர்செல்வம் கடும் கோபத்தில் இருந்தார். அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக டிசம்பர் மாத தொடக்கத்தில் ஓபிஎஸ் டெல்லி சென்ற நிலையில், கட்சியை பதிவு செய்ய சென்றதாக கூறப்பட்டது. ஏற்கெனவே அறிவித்த கூட்டத்தை ஓபிஎஸ் தள்ளிவைத்திருந்தார். அங்கு அமித்ஷாவை ரகசியமாக சந்தித்த பன்னீர்செல்வம் அதிமுகவில் சேர்வது குறித்து வலியுறுத்தி இருந்தார்.
பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரன் எடப்பாடியை சந்தித்து பேசியிருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பு என எடப்பாடி கூறிவிட்டார். இதனால் புதிய கட்சியை தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டுள்ளார்.
அதன்படி, ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையின் லெட்டர் பேடில் ‘உரிமை மீட்பு குழு’ என்பதற்கு பதிலாக ‘உரிமை மீட்பு கழகம்’ என மாற்றப்பட்டுள்ளது. முகவரியும் பசுமை வழிச்சாலைக்கு பதிலாக, நந்தனம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற புதுக்கட்சியை டிசம்பர் 23-ம் தேதி அறிவிக்க உள்ளதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் டிச.23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அல்லது அடுத்த நாள் வரும் எம்ஜிஆர் நினைவு தினத்தில் முறைப்படி புதுக்கட்சியை அறிவிக்க ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதே போன்று எம்ஜிஆருக்கு ஜெயலலிதா செங்கோல் தரும் படத்துடன் புதிய கட்சி கொடியையும் பன்னீர்செல்வம் தயார் செய்து வைத்துள்ளார்.
What's Your Reaction?

