வெள்ள நிவாரணமாக அரசு ரூ.25 ஆயிரம் வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு தெரிவித்ததை விட கூடுதல் நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Dec 22, 2023 - 18:00
Dec 26, 2023 - 15:03
வெள்ள நிவாரணமாக அரசு ரூ.25 ஆயிரம் வழங்க  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலையே தற்போதும் நீடிக்கிறது அன்புமணி ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மழை வெள்ள சேதங்களை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கினார்.தொடர்ந்து அவர் நெல்லை ராஜகோபாலபுரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”தமிழக முதலமைச்சர் மீண்டும் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வர வேண்டும். முதலமைச்சர் வந்தால் தான் பணிகளை முடுக்கி விட முடியும்.

அரசு அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது போதுமானதாக இல்லை. உடனடியாக பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கினால்தான் பொதுமக்களுக்கு ஓரளவு பாதிப்பை குறைக்க முடியும். விவசாய பயிர்கள்  பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 17,000 ரூபாய் என்பது போதுமானது அல்ல.பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.கனமழை வருவதற்கு முன்பும் வந்த பின்பும் அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

சென்னை வானிலை ஆய்வு மையத்தை  மூடிவிடலாம். சுதந்திர காலத்திற்கு முன்பு எப்படி இருந்ததோ, அதுபோன்ற நிலையே வானிலை ஆய்வு மையத்தில் தற்போது நீடிக்கிறது. வெளிநாடுகளில் எப்போது மழை பெய்யும்? எவ்வளவு நேரம் மழை பெய்யும் என்பது உள்ளிட்ட தகவல்கள் தரப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 21 சென்டிமீட்டருக்கு மேல் மழை அளவு என்பது குறித்த தகவல்கள் இல்லை.வானிலை பருவ மாற்றங்களால் இதுபோன்ற வெள்ள பாதிப்புகள் இனி அடுத்து வரும் வருடங்களில் வர வாய்ப்புள்ளது. அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும்.ஏராளமான உயிர் பலி ஏற்பட்டுள்ளது. அரசு தெரிவித்ததை விட கூடுதல் நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசு, தமிழக அரசு கேட்டுள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும். தென் தமிழகத்தின் பாதிப்புகளுக்கு 2000 கோடி  ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் ஆய்வு மேற்கொள்ள போவதாகவும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow