பொன்முடி மகன் கௌதம சிகாமணிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணை ஜனவரி 4க்கு தள்ளிவைப்பு
நீண்ட நாட்கள் தள்ளிவைக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
திமுக எம்.பி. கௌதம சிகாமணிக்கு எதிரான அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கில் ஜனவரி 4 தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2006-2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தியது.செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில், இந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம்,கோபிநாத் மற்றும் கே.எஸ் பிஸ்னஸ் கவுஸ் நிறுவனம் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 24 தேதி நீதிமன்றத்தில் ஆஜரான கௌதம சிகாமணி உள்ளிட்டோருக்கு குற்றபத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக வழக்கு விசாரணை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (டிச.22) விசாரணைக்கு வந்த போது, கௌதம சிகாமணி ஆஜராகாத நிலையில், அவர் தரப்பில் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.நீண்ட நாட்கள் தள்ளிவைக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
What's Your Reaction?