”அவருக்கு ஒண்ணுமே தெரியவில்லை” விஜயை மீது எடப்பாடி திடீர் பாய்ச்சல்
அவருக்கு ஒண்ணுமே தெரியவில்லை, வீட்டை விட்டு முதலில் வெளியே வரட்டும் என தவெக தலைவர் விஜய் மீது எடப்பாடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு தேர்தல் வாக்குறுதிகளை 2-ம் கட்டமாக எடப்பாடி அறிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு எடப்பாடி பதிலளித்தார்.
கேள்வி : முழுவதுமான தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்…?
இபிஎஸ் : படிப்படியாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறோம். நிறைய அறிவிப்புகள் இருக்கின்றன. எங்கள் தேர்தல் பணிக்குழு அதை எல்லாம் சரிபார்த்து முழு பட்டியலாக அதிமுக விரைவில் வெளியிடும். மேலும் பல அறிவிப்புகள் வரும்.
கேள்வி : ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று, எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தீர்கள், அது வருமா..?
இபிஎஸ் : ஏற்கனவே அறிவித்தவை எல்லாம் ஒவ்வொன்றாக வரும். ஆட்டோ ஓட்டுனர்கள் இன்னும் பல கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள், அந்த கோரிக்கைகளும் பரிசீலனையில் இருக்கிறது, இறுதி வடிவம் வந்தவுடன் வெளியிடுவோம்.
கேள்வி : திமுகவில் இன்னும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையே நடத்தவில்லை, ஆனால் நீங்கள் இவ்வளவு வேகமாகப் போகிறீர்களே..?
இபிஎஸ் : இதே ஊடக நண்பர்கள், எங்களை எப்படி கிண்டலும், கேலியுமாகப் பேசினீர்கள். இப்போது நீங்களே அந்த கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இரண்டு வாரத்திற்கு முன்பு ஸ்டாலின் அவர்களும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும், ’இபிஎஸ் கடை விரித்து வைத்துக்கொண்டு இருக்கிறார். அங்கு யாருமே கூட்டணிக்கு போகவில்லை’ என்று சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், இப்போது அதிமுகவும், என்டிஏவும் சேர்ந்து பலம் வாய்ந்த கூட்டணி அமைத்துவிட்டோம். எங்கள் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, மற்றும் அமமுக எல்லாம் இணைந்திருக்கிறது இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளது. இப்போது தமிழகத்தில் கூட்டணி என்று சொன்னால் அது, அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணி.
கேள்வி: விஜய் தொடர்ச்சியாக, அதிமுகவை விமர்ச்சித்து வருகிறார், அதை எப்படி எடுத்துக்கொள்வது..?
இபிஎஸ் : அவர் வெளியே வந்து பொதுவெளியில் பார்த்தால் தான் தெரியும். அவர் பொதுவெளிக்கே வரவில்லை. ஒரு சம்பவம் நடந்த பின், 72 நாட்களாக அவர் வெளியே வரவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எந்தக் கட்சி எந்தெந்தக் கட்சியோடு கூட்டணியில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை. எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்குகிறது என்று தெரியவில்லை. இவரை வைத்து என்ன செய்வது..?
அவருக்கு ஒன்றுமே தெரியாத போது எங்களை கேள்வி கேட்டால் எப்படி? அவரை போய் கேள்வி கேளுங்கள். ஏற்கனவே அதிமுக கூட்டணி அமைக்கிற போது, ஐடி சோழா ஹோட்டலில் தெளிவுபடுத்திவிட்டோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் பேட்டியிலேயே சொன்னார். அதிமுக - என்டிஏ கூட்டணி இரண்டும் இணைந்து, புதிய கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என்று அமித்ஷா கூறி இருக்கிறார். இந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். எங்களுடைய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று தெளிவுபடுத்திவிட்டார்.
இதை விஜய், டிவி, பத்திரிகையில்கூட பார்க்கவில்லை. அதற்கு அவருக்கு நேரமில்லை, மக்களைப் பார்ப்பதில்லை, டிவியைப் பார்ப்பதில்லை, ஒன்றுமே தெரியவில்லை. ஒரு கட்சியினுடைய தலைவருக்கு இது எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். எதுவும் தெரியாமல் அறியாமல் பேசுகிறார். நாட்டில் நடக்கிற நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை.
ஒரு தடவையாவது பத்திரிகையாளர்களை சந்திக்கச் சொல்லுங்கள். செய்தியாளர்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னால் தான், நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர் புரிந்து கொள்ளட்டும்.
கேள்வி : திமுகவை தீய சக்தி என்றும், அதிமுவை ஊழல் சக்தி என்றும் விஜய் விமர்சித்து இருக்கிறார். உங்களுடைய பதில் என்ன..?
இபிஎஸ் : ஊழல் சக்தி என்று யாரை குறிப்பிட்டு சொல்கிறார், எங்களை ஊழல் என்று சொல்வதற்கு வழியே இல்லை. எம்ஜிஆர், அம்மாவை ரோல் மாடல் என்கிறார். நான் முதலமைச்சராக இருந்த போது என் மீது ஊழல் புகார் சொல்லப்பட்டு, அதற்கு நீதிமன்றம் சென்று, நிரபராதி என்று வந்திருக்கிறேன். எப்படி ஊழல் என்று சொல்ல முடியும்.? அவர் யாரை கூடவே வைத்திருக்கிறார்..? நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. அதிமுகவில் இருந்து தவெக சென்றவர், அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்தவர். எங்களை குறிப்பிட்டுச் சொன்னால் அதற்குண்டான பதிலை நாங்கள் தெளிவாகச் சொல்வோம்.
கேள்வி : சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்வீர்களா..?
இபிஎஸ் : அதெல்லாம் ஏற்கனவே முடிந்துபோய் விட்டது. அதை திருப்பி திருப்பி ஏன் பேசுகிறீங்கள். நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன், விறுவிறுப்பான செய்திகளுக்காக, இனி இது போன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்.
What's Your Reaction?

