மாநிலங்களவை எம்.பி போட்டியில் எல்.முருகன், அஸ்வினி வைஷ்ணவ்...
கட்சியின் அறிவுறுத்தலின்படியே, மாநிலங்களவைக்கு போட்டியிட இருப்பதாக எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
சோனியா காந்தியை மாநிலங்களவை எம்.பி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்த நிலையில், எல்.முருகன் - அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரை பாஜக அறிவித்துள்ளது.
வருகிற 27-ம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இதற்கான வேட்புமனுத்தாக்கலை செய்ய இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட எல்.முருகனை பாஜக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசாவில் இருந்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும், மத்தியப்பிரதேசத்தில் இருந்து எல்.முருகன், உமேஷ் நாத் மகாராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த எல்.முருகன், உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியபோது RSS-பாஜகவின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த 2021ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்துக்கான மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. தொடர்ந்து, வரும் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் இருந்து எல்.முருகன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளார். கட்சியின் தேசிய தலைமையின் அறிவுறுத்தலின் படியே, மாநிலங்களவைக்கு போட்டியிட இருப்பதாக எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியாகாந்தி, ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளார். தேர்வுசெய்யப்படும் பட்சத்தில், இந்திராகாந்திக்கு அடுத்தபடியாக, காந்தி குடும்பத்தில் இருந்து இரண்டாவதாக சோனியாகாந்தி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?