விஜய்யின் லண்டன் பயணம்...! முதலீடு ஈர்ப்பா? கவன ஈர்ப்பா?

₹15,300 கோடி முதலீடு என அரசு தகவல்... ஆனால் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து அரசியல் களத்தில் தொடரும் பரபரப்பு!

Sep 20, 2026 - 13:00
Sep 19, 2026 - 17:02
விஜய்யின் லண்டன் பயணம்...! முதலீடு ஈர்ப்பா? கவன ஈர்ப்பா?
Vijay vs Opposition: London Trip Explained !

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் மு முதலீடுகளை ஈர்ப்பதற்கா அல்லது அஜித்துடன் சேர்ந்து விளம்பரப்படுத்தி தன்மீது கவனம் ஈர்த்துக்கொள்வதற்கா?' எனும் சூடான விவாதம் தமிழக அரசியல் களத்தில் வெடித்திருக்கிறது. கூடவே, 'ஒரு இந்திய கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்வதற்காகவா கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து லண்டன் வரை சென்றார்?' எனும் காட்டமான விமர்சனத்தையும் முதல்வர் விஜய்யை நோக்கி எதிர்க்கட்சிகள் முன்வைக்க, தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் தி.மு.க., மட்டுமல்லாமல் அதிமு.க. பா.ஜ., பாமக, நாம் தமிழர், இடதுசாரிகள், அமமுக உள்ளிட்ட அனைத்துக் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மூத்த அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். 'முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தால் தமிழகத்திற்கு 15,300 கோடி ரூபாய் முதலீடு கிடைத்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் மட்டுமே 11,000 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்தது என்பதால், இங்கேயே ஒப்பந்தம் போடாமல் லண்டன் சென்று ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன?

அதேசமயம், டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் வருகை தந்த மலேசியப் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு பிரதமர் அன்வர் இப்ராஹிம், முதல்வர் விஜய்யை சந்திக்க ஆர்வம் காட்டியிருக்கிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், அவருடனான சந்திப்பை தவிர்த்துவிட்டு, லண்டன் பயணத்திற்கு முதல்வர் முன்னுரிமை கொடுத்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. மலேசியப் பிரதமரை விஜய் சந்தித்திருந்தால், அங்கிருந்து ஆயிரக்கணக்கான கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்திருக்கும். மேலும் தொழிற்துறை அமைச்சர், அந்த துறை செயலாளர் ஆகியோர் முதல்வருடன் செல்லவில்லை. அதேசமயம், முதல்வரின் நண்பர்களான ஜெகதீஷ் பழனிசாமி, விஷ்ணு ரெட்டி, தனி உதவியாளர் ராஜேந்திரன் என பலர் அவருடன் லண்டன் பயணம் மேற்கொண்டிருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது.

இவையெல்லாம் மிஞ்சும் விதமாக, நடிகர் அஜித் பங்கேற்ற ரேஸ் நிகழ்வில் முதல்வர் விஜய் கலந்துகொண்டதும். அங்கு நடைபெற்ற சில சம்பவங்களும் கடும் விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் லண்டன் பயணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தமிழக தொழில்துறைக்கு நம்பிக்கை அளிப்பதாகத்தான் இருக்கிறது." என்று கூறி முடித்தார்.

முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்துடன் முன்னாள் முதல்வர்களின் கடந்தகால வெளிநாட்டுப் பயணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியதும் இன்றைய நிலையில் அவசியம்.

2017 முதல் 2021 வரை முதல்வராக இருந்த இ.பி.எஸ். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதன்முறையாக 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 10 வரை இங்கிலாந்து, அமெரிக்கா, அரபு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவருடன் தொழிற்துறை அமைச்சரான எம்.சி.சம்பத், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், தொழிற்துறைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோரும் சென்றிருந்தனர். தவிர, எடப்பாடியின் அதிகாரப்பூர்வ சீனியர் பி.ஏ.வாக இருந்த அரசு அலுவலர் கிரிதரன் மட்டுமே இந்த பயணத்தின்போது உடனிருந்தார். அந்த பயணத்தின்போது 35,520 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.8,835 அளவுக்கு பல்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2021ல் முதல்வராக பதவியேற்ற மு.கஸ்டாலின், 2022 மார்ச் 22 முதல் 29 வரை துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்கப் பயணமானார். அப்போது அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ. உதயநிதி, எம்.பி. எம்.எம்.அப்துல்லா, தொழில்துறைச் செயலாளர் கிருஷ்ணன், நெறிமுறைக் குழு இயக்குநர் பூஜா குல்கர்ணி ஆகியோரும் சென்றிருந்தார்கள். மேலும் ஸ்டாலினின் மனைவி துர்கா, மருமகன் சபரீசன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலரும் சென்றிருந்தனர். இந்த பட்டியலில் முதல்வரின் தனிச் செயலாளர் தினேஷும் இடம்பிடித்தார்.

அந்த நாடுகளில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.6,100 கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிவிட்டு, தன் குடும்பத்தினருடன் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்று விமர்சனம் எழுந்தது.

இதுகுறித்து த.வெ.க. முதன்மை செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசியபோது, சம்வர்தனா மதர்சன் நிறுவனம் லண்டனிலும் செயல்பட்டுவருவதால், துறைசார்ந்த அடிப்படையில்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று நான்கே மாதங்களுக்குள் முதல்வர் 15,300 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஈட்டியிருப்பதை பொறுக்கமுடியாமல் எதிரணியினர் விமர்சனம் செய்கிறார்கள். முதல்வரின் லண்டன் பயணம் உறுதி செய்யப்பட்ட நேரத்தில் நடிகர் அஜித் கார் ரேஸில் அங்கு பங்கேற்றிருக்கிறார். இரண்டு நிகழ்வும் பொருந்திப்போய்விட்டது. மற்றபடி முதல்வரின் பயணத்தின் முக்கிய நோக்கமே முதலீட்டை ஈர்ப்பதுதான்.

எடப்பாடி பழனிசாமி 30 மாதங்களில் 8,835 கோடி ரூபாய்தான் கொண்டு வந்தார். ஸ்டாலின் ஆட்சியில் 10 மாதங்களுக்குப் பிறகு 6,100 கோடி மட்டுமே வந்திருக்கிறது. இந்த இரண்டு தொகையையும், முதல்வர் விஜய் ஈர்த்திருக்கும் தொகையோடு மாதத்தின் அடிப்படையில் வகுத்துப் பார்த்தால், அவர்தான் அதிகமாக தமிழகத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். இந்த கணக்குதான் எதிரணியினருக்கு பீதியை ஏற்படுத்திவிட்டது. அதனால்தான் இப்படி குறை சொல்கிறார்கள்.

த.வெ.சு. ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்திற்குள்ளாகவே தொழிற்துறை அமைச்சர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார். சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றபோது முதல்வர் விஜய் முன்னிலையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த நிகழ்விலும் தொழிற்துறை அமைச்சர் பங்கேற்றார். மாநில ஆட்சியைப் பொறுத்தவரை முதல்வருக்குத்தான் சுப்ரீம் பவர். அப்படியிருக்கும்போது மற்றவர்களை பற்றி கேள்வி எழுப்புவது என்பது சிறுபிள்ளைத்தனமானது' என்றார்.

விமர்சனங்களோடு முதலீடுகளும் குவிவது நன்மையே!

- குமுதம் செய்திகளுக்காக தாரை இளமதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow