"காதுக்குள் ஏதோ கேட்குது" கடிதம் எழுதி வைத்து விட்டு ஐடி ஊழியர் தற்கொலை
"காதுக்குள் ஏதோ ஒலி கேட்பதாக" கடிதம் எழுதி வைத்து விட்டு ஐடி ஊழியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
சென்னை மேற்கு முகப்பேர் திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் ரோஷன் நாராயணன் (24). அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவரது பெற்றோர் மற்றும் சகோதரர் அவரது மனைவி ஆகியோர் திருப்பதி சென்று விட்டனர்.
வீட்டில் ரோஷன் நாராயணன் தனியாக இருந்தார். இன்று அதிகாலையில் அனைவரும் வீடு திரும்பினர். வீட்டின் கதவை தட்டி பார்த்தும் திறக்கப்படவில்லை. இதையடுத்து பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்த போது ரோஷன் நாராயணன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவகள் கதவை உடைத்து சென்றனர்.
108 ஆம்புலன்ஸ் வந்து செவிலியர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது. தகவல் அறிந்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் ரோஷன் தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். தற்கொலை கடிதம் சிக்கியது.
அதில், "தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஓர் ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதாகவும், சகோதரரிடம் ஏற்கனவே சண்டை போட்டதால் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், தாய்- தந்தையர் தன்னை மன்னித்து விடுங்கள் என்றும் எழுதி வைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
What's Your Reaction?

