போலி நகைகள் அடகு வைக்க முயற்சி...7 பேரை அதிரடியாக கைது செய்த காரைக்குடி போலீஸ்...
காரைக்குடியில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள அடகுகடையில் சென்னை வடபழநி பகுதியை சேர்ந்த நாச்சியப்பன் என்பவர் 147 கிராம் எடையுள்ள நகைகளை அடகுவைக்க சென்றுள்ளனர்.
நகைகளை பார்த்ததும் அடகுகடை உரிமையாளர் விக்னேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நகைகளை பரிசோதிக்கும் இடத்திற்கு எடுத்து பரிசோதனை செய்து பார்த்த போது ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட தங்கம் முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அடகுகடை உரிமையாளர் விக்னேஷ் மற்றும் ஊழியர்கள், போலி நகைகளை அடகு வைக்க வந்த நாச்சியப்பனை பிடித்து வைத்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அடகுகடைக்கு வந்த போலீசார், நாச்சியப்பனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், முகப்பேர் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜன், காரைக்குடியை சேர்ந்த ராஜகோபால், ராமசாமி, கேரளாவைச் சேர்ந்த பீனு, சுபாஷ் குமார் ஆகியோருடன் சேர்ந்து இது போன்று போலி நகைகளை அடகு வைத்து பல ஊர்களில், பல லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
நாச்சியப்பன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் வந்த கூட்டாளிகள் என மொத்தம் 7 பேரையும் கைது செய்த போலீசார்,147 கிராம் போலி நகைகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?