கவுன்சிலர் லாக்கப் மரணம்? மூடி மறைக்கிறதா தமிழ்நாடு போலீஸ்? கதறும் குடும்பத்தினர்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கொலை வழக்கில், விசாரணை கைதியான கவுன்சிலர், போலீஸாரின் பிடியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பல்வேறு சந்தேகங்களைக் எழுப்பி இருக்கிறது. இந்த நிலையில், கவுன்சிலரின் மரணத்திற்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்று கூறி அவரின் உடலை வாங்க மறுக்கும் உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த கவுன்சிலர் சாந்தகுமார், கடந்த வருடம் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் என்பவரின் கொலை வழக்கில் கைதானார். ஒரு வருட சிறைக்கு பிறகு அண்மையில் நிபந்தனை ஜாமினில் சாந்தகுமார் வெளியே வந்தார். ஜாமினில் வெளி வந்த அவரை, பழி தீர்க்க ஒரு கும்பல் அலைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சாந்தகுமார் மர்மமான முறையில் மரணமடைந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
இந்த நிலையில் அவரை காவல்துறை அடித்தே கொன்றதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சாந்தகுமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரனை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இது திட்டமிட்ட படுகொலை எனக்கூறி சாந்தகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினர், ஒரு வாரத்திற்கு மேலாகியும் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடயே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் சூசை, உயிரிழந்த சாந்தகுமாரின் மனைவியுடன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அவருடன் வந்த இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் சூசை, உடற்கூறாய்வு அறிக்கையில் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என சுட்டிகாட்டினார்.
கவுன்சிலரின் மர்ம மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படுவதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல் ஆணையர் உறுதி அளித்திருப்பதாக சூசை கூறினார்.
What's Your Reaction?