அமைச்சர் கே என் நேரு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு.. கோவையில் வளைக்கும் வருமான வரித்துறை
அமைச்சர் கே என் நேரு உடன் தொழில் தொடர்புடையவர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினரை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம் பணம் வாங்குவதும் குற்றம் என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வருகிறது.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்தவகையில், நேற்று தமிழத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ரத்னா நகர் பகுதியில் வசித்து வருபவர் தங்கவேலு. இவர் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜாவின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் நேற்று காலை தங்கவேலு வீட்டில் சோதனை நடத்தினர்.
கோவை, அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ்பகுதி அருகே உள்ள அமைச்சர்கே.என்.நேருவுக்கு நெருக்கமானவரான அவிநாசி ரவி என்பவரது அலுவலக கட்டிடத்தில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ராம் நகர் பகுதியில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த, தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் குழாய் பதிக்கும் ஒப்பந்ததாரரான வேலுமணி ,48 என்பவருக்கு சொந்தமான அவிநாசி காமராஜர்நகரில் உள்ள வீடு, கைகாட்டிபுதூரில் உள்ள அலுவலகம், அவிநாசி - திருப்பூர் சாலையில் உள்ளபெட்ரோல் பங்கிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் இருந்து வாடகை பதிவெண் கொண்ட கார்களில் வந்தவருமான வரித்துறை அதிகாரிகள் குழு 3 ஆக பிரிந்து வேலுமணியின் அலுவலகத்தில் 8 பேரும், வீட்டில் 2 பேர் மற்றும் பெட்ரோல் பங்க் என 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் எஸ்எம்டி.மூர்த்தி என்கிற ஈஸ்வர மூர்த்தி. அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமாக உள்ள இவரது வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் 5 பேர் நேற்று இரவு 7 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றைய தினமும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை ராம் நகரில் இருக்கும் சுனில் குமாருக்கு சொந்தமான பி எஸ் கே அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது. சுனில் குமார் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரராக பணிகளை செய்து வருகிறார்.
இதே போல கோவை அவிநாசி சாலையில் உள்ள சிஏஜி கிராண்ட் வளாகத்தில் செயல்படும் அலுவலகம் ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்நிறுவனத்தில் உரிமையாளர் ரவி அமைச்சர் கே என் நேருவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணம் ஏதும் பதுக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பசையான அமைச்சர்களை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பலரும் கலக்கமடைந்துள்ளனர்.
What's Your Reaction?