நீரில் மூழ்கி சிறுவர்கள் பலி... லீவுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்... உடலை பார்த்து கதறியழுத உறவினர்கள்...

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கிய அண்ணனைக் காப்பாற்ற சென்ற தம்பியும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Apr 17, 2024 - 20:45
நீரில் மூழ்கி சிறுவர்கள் பலி... லீவுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்... உடலை பார்த்து கதறியழுத உறவினர்கள்...

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி -  சாந்தலட்சுமி தம்பதி. மனைவி சாந்தலட்சுமி 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்த நிலையில், மகன்கள் திலிப்ராஜ் (16) மற்றும் தினேஷ் (14) ஆகியோரை தந்தை ராமமூர்த்தியின் கவனிப்பில் வளர்ந்து வந்தனர்.

இந்த நிலையில், சிறுவர்கள் இருவரும், கடலூரில் உள்ள ஓயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான மனக்குன்றியோர் பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே விடுமுறை காரணமாக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள திருக்குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். 

குளிக்கும் போது, ஆழத்திற்கு சென்ற அண்ணன் திலிப் ராஜ், சேற்றில் மாட்டிக் கொண்டுள்ளார். அப்போது, தம்பி தினேஷ் அவரை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இறங்கிய நிலையில், இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது. 

இதனிடையே குளத்தில் சடலங்கள் மிதப்பதைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள் சிறுவர்களின் உடலை மீட்டனர். சிறுவர்களின் உடலை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார்  சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கோடை விடுமுறைக்காக, வீட்டிற்கு வந்த சகோதரர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடுமுறை காலத்தில் தான் வீட்டில் உள்ள சிறுவர்களை பெற்றோர்கள் மேலும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow