பொன்முடி அமைச்சராகும் விவகாரம்: ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு.. நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்...
அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் எம்.எல்.ஏ.வான பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஆளுநர் எழுதிய பதில் கடிதத்தில், பொன்முடிக்கு தண்டனை தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை என்பதால் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மாநில அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஆளுநர் நிராகரித்துள்ளதாகவும், சட்டப்படி அதை நிராகரிப்பதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பின்னர் வழக்கை அவசரமாக விசாரிக்க தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை நாளையே (மார்ச்-19) விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
What's Your Reaction?