விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவும் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

Apr 6, 2024 - 11:08
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள், உடனடியாக மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலன் இன்றி புகழேந்தியின் உயிர் பிரிந்தது. தகவல் அறிந்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் திமுக நிர்வாகிகள் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். 

யார் இந்த புகழேந்தி:

எம்எல்ஏ புகழேந்தியின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர். திமுகவின் அனுபவம் மிக்க நிர்வாகி புகழேந்தி என்றும் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். 

கடந்த 1973ம் ஆண்டு முதல் திமுகவில் பணியாற்றி வந்த நா.புகழேந்தி திமுகவின் கிளைக் கழகச் செயலாளர் ஒன்றிய செயலாளர் மாவட்ட பொருளாளர் பிறகு தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

2018ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவருக்கு மீண்டும் 2021-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் நெருங்கிய நண்பராகவும் தீவிர விசுவாசியாகவும் இருந்தவர் நா.புகழேந்தி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow