புதுவை மருத்துவமனையில் பரபரப்பு : "என் மகனுக்கு சரியா மருத்துவம் பார்க்கல..." மருத்துவரின் கழுத்தை அறுத்த முதியவர்...
புதுச்சேரி மருத்துவமனையில் தனது மகனுக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரின் கழுத்தை முதியவர் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக நவீன் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் நவீன் பணி முடித்து வெளியே வரும்போது, முதியவர் ஒருவர் மது போதையில் நவீன் கழுத்தில் கத்தியால் குத்திக் கிழித்துள்ளார்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவரை முதியவரிடம் இருந்து மீட்டனர். படுகாயமடைந்த மருத்துவர் நவீனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச்சென்று சக ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெரிய கடை போலீசார், மதுபோதையில் இருந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், மதுபோதையில் இருந்த நபர் ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த கோபி என்பது தெரியவந்தது. இவர், புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மகனுக்கு மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நேற்று மாலை (ஏப்ரல் 15) முதல் மருத்துவமனையில் பிரச்னை செய்து வந்துள்ளார். இதையடுத்து மது அருந்திய முதியவர், இரவு பணி முடித்து வெளியே வந்த மருத்துவரை கத்தியால் தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, மருத்துவமனையில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி இரவில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?